Oct 29, 2025
உள்ளூர்
கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் 'Vision' தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (28) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமை, பாராளுமன்ற மரபு தொடர்பான வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் தற்போதைய செயல்பாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து சபாநாயகர் தெரிவு செய்யப்படல், சபாநாயகர் பதவியேற்பு மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் என்பன இடம்பெற்றன.
கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி அதிபர் சசிகலா சேனாதீர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எதிர்கால பிள்ளைகள் உலகளாவிய அறிவைப் பெறவும், நாட்டிற்கு உற்பத்தித் திறன் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கவும் புதிய கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் இங்கு தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்புச் சந்தை நோக்கங்களை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தும் மற்றும் உலகை மாற்றுவதில் கவனம் செலுத்தும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அது காலத்தின் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

பாடசாலைகளுக்கு இடையேயான வளங்களைப் பகிர்வதில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், இதற்காக, பிரஜைகளின் பொறுப்பின் முக்கியத்துவம் மற்றும் பாடசாலை மாணவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாடசாலைக்கு பெறுமதியான மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் 'Vision' சஞ்சிகையை பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு என்பன பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, கொழும்பு பல்கலைக் கழக சட்ட பீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன், ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலக முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








