Rebecca
Nov 23, 2025
உலகம்
டைட்டானிக் பயணியின் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை!
டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த பெரும் பணக்காரப் பயணியொருவரின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கைக்கடிகாரம் ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இந்த கைக்கடிகாரமானது 1.78 மில்லியன் பவுண்ஸ்களுக்கு விற்பனையாகியுள்ளது.
குறித்த கடிகாரம் ஐசிடோர் ஸ்ட்ரஸ் (Isidor Straus) என்பவருக்குச் சொந்தமானதாகும்.
இவர் அமெரிக்காவின் பிரபல ‘மேசிஸ்’ அங்காடியின் இணை உரிமையாளரும், அரசியல்வாதியும் ஆவார்.
1912 ஏப்ரல் 14 அன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியதில் உயிரிழந்த 1,500 பேரில் இவரும் இவரது மனைவி ஐடாவும் அடங்குகின்றனர்.
விபத்துக்குப் பின் சில நாட்களில் அட்லாண்டிக் கடலில் மீட்கப்பட்ட ஐசிடோரின் சடலத்திலிருந்து இந்த 18 கரட் தங்கக் கடிகாரம் கண்டெடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் உள்ள ‘ஹென்றி ஒல்ட்ரிட்ஜ் எண்ட் சன்’ (Henry Aldridge and Son) ஏல நிறுவனத்தில் சனிக்கிழமை இது விற்கப்பட்டது.
இதுவரை ஸ்ட்ரஸ் குடும்பத்தினரிடம் இருந்த இந்தக் கடிகாரம் தற்போது சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
கப்பல் மூழ்கிய இரவு, ஐசிடோரின் மனைவி ஐடா தனக்குக் கிடைத்த உயிர்காக்கும் படகில் ஏற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
கணவரைப் பிரிந்து செல்வதை விட, “அவருடனேயே இறப்பது மேல்” என அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேடுதலின் போது ஐடா ஸ்ட்ரஸின் உடல் ஒருபோதும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
ஏலத்தில் கைக்கடிகாரம் தவிர ஐடா கப்பலில் இருந்தபோது எழுதிய கடிதம் ஒன்றும் 100,000 பவுண்ஸ்களுக்கும், டைட்டானிக் பயணிகள் பட்டியல் 104,000 பவுண்ஸ்களுக்கும் விற்பனையாகின.
இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்களால் ‘கார்பாத்தியா’ கப்பல் குழுவினருக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் 86,000 பவுண்ஸ்களுக்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
மொத்தமாக, டைட்டானிக் தொடர்பான இந்த நினைவுப் பொருட்களின் ஏலம் மூலம் 3 மில்லியன் பவுண்ஸ்கள் ஈட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








