Search

Rebecca

Nov 20, 2025

உள்ளூர்

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு ஒரு மாத காலத்திற்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட ரூ.2,000 தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு வசூலிக்கப்படும் தொகை ரூ.21,000 ஆகவும், இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் ஆறு மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு வசூலிக்கப்படும் தொகை ரூ.30,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு மேல் மற்றும் 12 மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்கு வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வசூலிக்கப்படும் தொகை ரூ.45,000 ஆகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய, வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வசூலிக்கப்படும் தொகை ரூ.15,000 ஆகவும், சாரதி அனுமதிப்பத்திரம் அழிந்து போனாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அந்த அனுமதிப்பத்திரத்தின் நகல் பிரதி வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.15,000 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது அதற்கு இணையான அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முன்னர் அறவிடப்பட்ட ரூபா 3,300, தற்போது ரூபா 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது அதற்கு இணையான அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் வெளிநாட்டவருக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முன்னர் அறவிடப்பட்ட ரூபா 15,000, தற்போது ரூபா 60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp