Jino
Sep 29, 2025
உலகம்
"இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்" - விஜயின் உருக்கமான பதிவு.
தமிழ்நாடு - கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் .
- குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
"இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று (27) நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.
நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்ற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 இலட்சம் ரூபாவும் அளிக்க எண்ணுகிறேன்.
இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். என்று தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All