Search

Oct 24, 2025

உள்ளூர்

இலங்கை – ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சி.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் - இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயித் அல் ரஷ்தி அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (23) அமைச்சில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் துறைசார் உறவுகளை வலுப்படுத்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைத் அடைவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தூதுவர் அவர்கள், ஓமானில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக ஓமான் முதலீட்டு அதிகாரசபையின் (Oman Investment Authority - OIA) ஊடாகச் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார். ஓமான் முதலீட்டாளர்களை இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளுக்கு அறிமுகப்படுத்துவதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்,

"நாம் பொறுப்பேற்றது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான ஒரு நாட்டையும் அதே போல நெருக்கடிக்குள்ளான அமைச்சையுமாகும். ஆனாலும், தற்போது கடற்றொழில் அமைச்சையும் அதன்கீழ் உள்ள நிறுவனங்களையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஓமானும் கடற்றொழில் துறையில் ஒரு பலமான நாடாக இருப்பதால், இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு அவர்களின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்," எனக் குறிப்பிட்டார். அத்துடன், ஓமானில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஓமான் அரசாங்கத்திற்கு அமைச்சர் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர், கலாநிதி கோலித கமல் ஜினதாச அவர்கள், ஓமான் அரசின் படகு கட்டும் தேவைகளை, அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் நிறுவனத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கும், அதற்கான ஒரு கூட்டு முயற்சியை (Joint Venture) ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கமளித்தார். மேலும், ஓமானின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இலங்கையின் நாரா (NARA) நிறுவனத்திற்கும் இடையில் திறன் விருத்தி மற்றும் அறிவுப் பகிர்வு நிகழ்ச்சிகளையும், இந்நாட்டின் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைக்கான ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஓமான் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு தூதுவர் அவர்களால் அமைச்சருக்கு இங்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட துறைகளில் எதிர்காலத்தில் நெருக்கமாகச் செயற்பட இரு தரப்பினரும் இறுதியில் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp