Search

admin

Jul 1, 2026

உள்ளூர்

எதிர்கால பேரிடர்களைத் தடுக்க அரசின் புதிய செயல் திட்டம்!


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல் நினோ (El Niño) காலநிலை நிலைமைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து பல முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

எல் நினோ காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, தற்போதுள்ள முன்னறிவிப்புகள் தரவுகளின் அடிப்படையில் அமைந்தவையா என்றும், இதுவரை கணிக்கப்பட்ட முன்னறிவிப்புகளுடன் அவை எந்தளவுக்கு ஒத்துப்போகின்றன என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் தயார்நிலை குறித்து ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

இதன்போது, நீரை முகாமைத்துவம் செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும், விவசாயத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், வனவிலங்கு வலயங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வனவிலங்கு வலயங்களுக்குள் இருக்கும் குளங்களை உடனடியாக புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நீர்மின் உற்பத்தியைத் தடையின்றி பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், சூரிய சக்தியின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, பல நிறுவனங்களின் கீழ் சிதறிக்கிடக்கும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒரே மத்திய நிலையத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, கடந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட ' ஒருங்கிணைந்த பொறிமுறை' குறித்த குழு அறிக்கை இங்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கச் சட்டத்தில் உள்ள எதிர்வினையாற்றும் (Reactive) தன்மைக்கு பதிலாக, பேரிடர்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தேசிய சபைக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பேரிடர் முகாமைத்துவ சபையின் செயலாளர் ஆகியோரின் தலைமையிலான ஒரு நிர்வாக சபை மற்றும் மாவட்ட மட்டத்தில் செயல்படும் முறையான பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கும் இங்கு முன்மொழியப்பட்டது . அத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) ஆகியவற்றை ஒன்றிணைத்து அந்தச் சேவைகளை மேலும் திறம்பட மாற்றவும் முன்மொழியப்பட்டது.

கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட காப்புறுதி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் (NITF) ஊடாக மேற்கொள்ளப்படும் காப்புறுதிச் செயல்பாட்டில் அரசாங்கம் காப்புறுதி தவணைக் கட்டணங்களைச் செலுத்திய போதிலும், அனர்த்த காலங்களில் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் நன்மைகளில் சமனற்ற நிலை காணப்படுவதைச் சுட்டிக்காட்டினார். எனவே, நாடென்ற வகையில் விஞ்ஞான அடிப்படையில் எவ்வாறு காப்புறுதியைப் பெற்றுக்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மேலும், பேரிடர்களின் போது இழப்பீடு வழங்கும் போது, காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாமல் போகும் பிரச்சினைக்குத் தீர்வாக, அதிகாரிகள் மூலம் வசிப்பிடத்தை உறுதிசெய்து இழப்பீடு வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த்த திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், தற்போதுள்ள சிக்கலான காணிச் சட்டங்களை (சுமார் 5 சட்டங்கள்) மீளாய்வு செய்து, ஒரே ஒருங்கிணைந்த காணிச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று,மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களை, குறிப்பாக நுவரெலியா மாவட்டக் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக நான்கு வருட கால எல்லைக்கு உட்பட்ட

முறையான திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். அதற்காகப் பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலைக்கு தாக்குப் பிடிப்பது குறித்து காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்றக் குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்ததுடன், அனர்த்த முகாமைத்துவத்திற்கு விஞ்ஞான சான்றுகளின் அடிப்படையிலான கொள்கைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்..

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டத்தை திருத்துகையில் அந்த பரிந்துரை குறித்தும் கவனம் செலுத்துவதற்காக அதனை பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இவற்றுக்கு மேலதிகமாக, மீட்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்காக முப்படைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை மேம்படுத்துதல், பிரதேச மட்டத்தில் படகுகள், டிராக்டர்கள் போன்ற பேரிடர் உபகரணங்களை பராமரிக்கும் பொறுப்பை பிரதேச சபைகளிடம் ஒப்படைத்தல் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட அனர்த்த செயல்பாட்டு மையங்களை வலுப்படுத்துவதற்கும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All