
janani
May 1, 2026
உள்ளூர்
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த மக்களுக்கு தேசத்தின் நன்றிகள் - ஜனாதிபதி

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' புயல், மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
'டித்வா' போன்ற இயற்கை அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, 2025 ஆம் ஆண்டில் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்தமை, 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானத்தைப் பெற்றமை, முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பைப் பேணியமை, பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியமை, இலங்கை வரலாற்றில் அரச வருமான இலக்குகளை விஞ்சிய ஒரே ஆண்டு மற்றும் அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தைப் பெற்றமை உட்பட நாட்டின் முக்கிய பொருளாதாரக் காரணிகளில் பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
இத்தகைய தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், உழைக்கும் மக்களின் உழைப்பின் மதிப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப அரச கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு தோல்வியுறாத பயணத்திற்காக நாம் பணியாற்றிக் கொண்டே கற்றுக்கொண்டும் கற்றுக்கொண்டே பணியாற்றியும் வருறோம்.
நிச்சயமாக ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு அன்பான உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





