Search

puja

Jul 29, 2026

உள்ளூர்

நீதித்துறை சுதந்திரத்திற்கு ஆபத்தா? அமைச்சரவை முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

நீதித்துறை செயல்முறையை திறமையாகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் மாற்றுவதாகக் கூறி, அரசியலமைப்பு மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை ஒப்புதலுக்கு 'தினன தக்குன' கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பையும் சந்தேகத்தையும் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அக்ககூட்டமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், இந்த நடவடிக்கையானது நீதித்துறையின் சுதந்திரத்தைச் சீரழிப்பதற்கான ஆரம்ப கட்ட முயற்சி எனச் சாடியுள்ளது.


மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாகாண மட்டத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகளை விரிவாக்குதல் போன்ற பிரபலமடையக்கூடிய நிர்வாகச் சீர்திருத்தங்களின் போர்வையில், தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் மறைமுக அரசியலமைப்புச் சதி இதில் அடங்கியுள்ளதாகக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசு ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிக்கு எழுப்பிய கடும் எதிர்ப்பைத் தவிர்க்கவே, தற்போது நீதித்துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் இத்தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

பதவியில் உள்ள அதிகாரிகளின் நலனுக்காக அரசியலமைப்பு விதிகளை மாற்றுவது ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், அதிகாரப் பகிர்வு தத்துவத்திற்கும் பேரபாயத்தை ஏற்படுத்தும். இது நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்தில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என எச்சரித்துள்ளது.

 

இந்தத் திருத்தத்தில் அரசின் நன்னோக்கத்தை நிரூபிக்க 'தினன தக்குண' கூட்டமைப்பு ஒரு முக்கிய சட்டக் கோட்பாட்டை முன்வைத்துச் சவால் விடுத்துள்ளது:

 

"நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைப்பதே நோக்கம் என்றால், ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்தங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டும். தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளிட்ட பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீடிக்கப்பட்டால், இதன் நோக்கம் அரசியல் சுயநலமே என்பது உறுதியாகும்."


சட்ட வரைஞரால் (Legal Draftsman) தயாரிக்கப்படவுள்ள வரைவுகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 'தினன தக்குண' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படக் கூடியது அல்ல; மாறாக அது குடிமக்களைப் பாதுகாக்கும் இறுதி கேடயம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All