
Rebecca
Feb 11, 2026
உள்ளூர்
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள், இலங்கையின் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், மோசடி மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டங்களைப் பாராட்டியதுடன், அதற்காக தனது ஆசிகளையும் வழங்கினார்.
மேலும், இலங்கையில் வாழும் போரா சமூகத்தினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தினர் வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியிடம் விளக்கினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக தனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






