Search

puja

Aug 9, 2026

உள்ளூர்

தலைமைத்துவம், சுயநம்பிக்கை, சேவை – சாரணர்களுக்கு புதிய திட்டம்!

இலங்கை சாரணர் இயக்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான 'தேசிய சாரணர் சேவை மற்றும் பொதுமக்கள் தொடர்பு வேலைத்திட்டம்' தொடக்கி வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனත් குமாநாயக்க தலைமையில் நேற்று(08)ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தேசிய சாரணர் கழுத்துப்பட்டை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, பிரதம சாரணரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இந்நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சாரணர் சேவையை வழங்குவது என்பது வெறும் நிதி திரட்டும் நோக்கம் கொண்டது மட்டுமல்ல என சுட்டிக்காட்டிய அவர், சிறுவயதிலிருந்தே பெரியவர்கள் தமக்காகச் செய்யும் உழைப்பின் மதிப்பை பிள்ளைகளுக்கு நடைமுறை ரீதியாகப் புரிய வைப்பதன் மூலம், மற்றவர் மீதான அக்கறை கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே சாரணர் சேவை நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பிரதான உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் உறுப்பினர்களைக் கொண்ட சாரணர் இயக்கம், அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து ஆற்றக்கூடிய பணிகள் குறித்த திட்டமொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தின் தலைமைத்துவ ஆற்றல், ஆளுமை, சுயநம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையை வளர்த்து, அவர்களை நல்லொழுக்கமும் பொறுப்புணர்வும் கொண்ட பிரஜைகளாக மாற்றுவதற்கு சாரணர் இயக்கம் அளிக்கும் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய சாரணர் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து சாரணர் பிரதிநிதிகளால் தேசிய சாரணர் சேவை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்த சேவை நடவடிக்கைகளை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்த பின்னர், திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட நினைவு அட்டையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கையொப்பமிட்டார்.

குழுப் புகைப்படத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கிரிஷாணி சி. விதானகே, பிரதிப் பிரதம சாரணர் ஆணையாளர் கபில கல்யாண பெரேரா, தேசிய வேலைத்திட்ட ஆணையாளர் கீத் ரமேஷ், சர்வதேச ஆணையாளர் கலாநிதி டபிள்யூ. எம். ஏ. பி. டபிள்யூ. ஈரியாவ, உதவிப் பிரதம ஆணையாளர்களான கே. பி. ஜி. கே. பி. சம்பத், டபிள்யூ. எம். எல். சந்திராணி பெர்னாண்டோ, பிரபாத் குலரத்ன, அமில் அபேசுந்தர, எச். எல். கபில பிரியந்த, தலைமையக ஆணையாளர்களான எஸ். அமர்ராஜ், ஏ.ஜெகநாதன், டி. ஏ. இனோகா சாமினீ ஜயசேகர, பி. ஏ. சஜீவ அபேவர்தன, விசேட ஆணையாளர்களான எம். ஈ. எஸ்.ஜயசிங்க, சந்துன் ஜீவந்த பத்திரண, டபிள்யூ. எம். எம். எஸ். கே. தலக்கிரியாவ, மேல் மாகாண ஆணையாளர் கெப்டன் பி. ஏ. டி. ஆர். இந்திக பாலசந்திர உள்ளிட்ட நிர்வாகிகள், சிறுவர் சாரணர், போதக சாரணர், மாணவ சாரணர், ரோவர் சாரணர் மற்றும் சாரணர் தலைவர்கள் என சாரணர் இயக்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All