Search

Rebecca

Feb 4, 2026

உள்ளூர்

தனிப்பட்ட ரீதியாகவும் கூட்டு ரீதியாகவும் உங்கள் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம்

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும் கூட்டு ரீதியாகவும் அனைவரினதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலித்தனமான எதிர்காலச் சந்ததியினருக்காக எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது.

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் உங்கள் அனைவரதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

பலமான பொருளாதார அடிப்படையொன்றின் மீது நாட்டை நிலைப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக அரசியல் மற்றும் அரசியல்வாதி பற்றிய புதிய முன்மாதிரிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல், இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய எந்தவொரு குடிமகனும் கைவிடப்படாத விதத்தில், அத்தியாவசிய சமூகக் குழுக்களுக்கான அணுகலை உறுதிப்படுத்தும் நலன்புரிப் பொறிமுறைகளை உருவாக்குதல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் ஊடாகப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் உலகின் அனைத்து நாடுகளுடனும் தேசங்களுடனும் மிகவும் நம்பகமான முறையில் உறவுகளைப் பேணக்கூடிய அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாகச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையை மீண்டும் ஒரு வர்த்தக நாமமாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த இலக்குகளை அடைவதற்காகக் குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலமே ஆரம்பமாகியிருக்கின்றது.

அதற்காக அனைத்து இலங்கை மக்களும் மிகவும் பலமாகவும் நம்பிக்கையுடனும் அணிதிரளுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறும் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All