Search

admin

Jul 4, 2026

உள்ளூர்

புதிய சுற்றறிக்கையின் நடைமுறை முன்னேற்றம் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்.

நிலவும் டெங்கு தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டெங்கு ஒழிப்புத் திட்டம் தொடர்பாக 2026 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களும் முன்னெடுத்த திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய டெங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதேபோன்று எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதிஅபாய வலயங்களில் டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நிலையான தீர்வுகள் குறித்தும், அதிஅபாயப் பகுதிகளில் புகையடிக்கும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், டெங்கு கட்டுப்பாட்டு செயல்பாட்டு அறையிலிருந்து பெறப்படும் தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

டெங்கு அதிஅபாயப் பகுதிகளை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், பாரம்பரிய முறைகளில் இருந்து விடுபட்டு புதிய வழிமுறைகளின் ஊடாக திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது என்றும், அதற்காகப் பொதுமக்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பங்களிப்பை அதிகரித்து, வீடுகள் சார்ந்த தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் அவசியமும், துல்லியமான தரவுகளின் அடிப்படையில் அதிஅபாய வலயங்களை மீட்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, மேலதிக செயலாளர் (மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி) எம். கொடிப்பிலிஆரச்சி, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, மேலதிக பணிப்பாளர் நாயகம் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகம்) பி.ஜி.ஐ. கமகே, பணிப்பாளர் (சமூக) கபில செனரத் பணிப்பாளர் (தொண்டர் சேவை) எச்.பி.எஸ். சாந்த ஆகியோருடன் 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் அதிகாரிகள், சுகாதாரத் துறை பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All