Dec 10, 2025
உள்ளூர்
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
' கிவுல் ஓயாதிட்டம் ஆரம்பிக்கப்பட்டு 40ஆண்டுகள் கடந்தபோதும் மகாவலி ஆற்றின் ஒரு துளி நீர் இதுவரையில் திட்டப்பிரதேசத்திற்கு வரவில்லை'என செவ்வாய்க்கிழமை (09) அன்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம்”கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் வெளிப்படையான கலந்துரையாடலை கோரினார்
மேலும் கருத்துத்தெரிவித்த அவர் மகாவலி “எல்” வலயம் கடந்தகால அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ் மக்களது விருப்பத்திற்கு மாறாகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறியே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 40ஆண்டுகள் கடந்தபோதும் மகாவலி ஆற்றின் ஒருதுளி நீர் இதுவரையில் திட்டப்பிரதேசத்திற்கு வரவில்லை என்றும் அவ்வாறு நீரை கொண்டுவருவதும் அவர்களது நோக்கமல்ல. மாறாக திட்டப்பிரதேசத்திற்கு சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீரை வழங்குவதற்காக புதிய நீர்வழங்கல் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முன்னய அரசுகள் முன்மொழிந்தபோதும் அவை நடைமுறைக்கு வராது முன்மொழிவுகளாகவே இருந்தது.
அதுவே “கிவுல் ஓயா திட்டம்” ஏற்கனவே கொண்டுவரப்பட்ட “மகாவலி எல்” திட்டத்தால் இன்றும் தமிழ் மக்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றபோது மீண்டும் பிரதேசமக்களின் சம்மதம் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாவட்ட மட்ட அதிகாரிகளிடமோ அல்லது மக்கள் பிரதிநிதிகளிடமோ பேசாமல் இரகசியமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதை அறியமுடிகிறது.
இவ்வாறே செட்டிகுளம் பிரதேசத்தில் “கீழ் மல்வத்து ஓயா” திட்டம் இரகசியமாக மாவட்ட மக்களுடனோ அல்லது மக்கள் பிரதிநிதிகள் மாகாணசபை போன்றவற்றுடனோ கலந்துரையாடப்படாமல் திட்டக்காரியாலயத்தை அனுராதபுரத்தில் நிறுவி வேலைகள் நடைபெறுகிறது. இத்திட்ட முன்மொழிவு எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயனுடையதாக இருந்தாலும் உள்நோக்கம் வேறாகவே உள்ளது. உதாரணமாக திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இடம்பெயர்ந்த அனுராதபுர மாவட்ட மக்களை வவுனியா மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி மதவாச்சி மன்னார் வீதியில் முதலியார்குளம் பிரதேசத்தில் ஆயிரம் ஏக்கர் காணியில் குடியமர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை 2017ம் ஆண்டளவில் எனது தலையீட்டினால் நிறுத்தப்பட்டது.
கிவுல் ஓயா திட்டத்தை செயல்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களுடனோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுடனோ அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலோ திட்டம் தொடர்பில் இதுவரை கலந்துரையாடாமல்இ திட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது இத்திட்டம் தொடர்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே இத்திட்டம் தொடர்பில் மக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் உரிய தரப்பினர் கலந்துரையாடல் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்படல் வேண்டும்.
மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டி திட்டத்திற்கான அனுமதியை பெறவேண்டும் என கோரினார்.
இதனையடுத்து இவ்விடயம் பற்றி ஒரு மாதகாலப்பகுதிக்குள் உரிய கூட்டங்களை நடாத்தி விடயங்களை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன் மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் உபாலி சமரசிங்க ஆகியோர் உறுதியளித்திருந்தனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








