Rebecca
Dec 12, 2025
உள்ளூர்
அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
நிதிச்சலவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடொன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகப் பணச்சலவை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இம்முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
இம்முறைப்பாடு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன, பி.எம். குணவர்தன, முத்துராஜா சுரேந்திரன் ஆகிய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஏனைய சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அச்சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, பிரதான நீதவான் இதன்போது மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து விரைவில் அறிக்கையளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
அதனையடுத்து, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








