
Rebecca
Mar 5, 2026
உள்ளூர்
மேலும் ஒரு ஈரானிய கப்பல்! அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்!

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சஜித் பிரேமதாச, நேற்றைய தினம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து டொர்பிடோ மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலும் அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஈரானிய கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய இலங்கை படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தச் சம்பவம் தொடர்பில் இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெளிவான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நேற்றைய தினம் (04) நாட்டுக்கு அருகில் இவ்வாறானதொரு கப்பல் அழிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தும் சபைக்கு அறிவிக்காமை பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியலமைப்பு ரீதியான கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஈரானியர்களின் சடலங்களை வைப்பதற்கு வைத்தியர்களால் 40 அடி கொள்கலன் கோரப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், எமது நாட்டு கடற்பரப்பில் இடம்பெறும் செயற்பாடுகளை அரசாங்கம் அறியாமல் இருப்பது எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக அமையாது எனவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





