
SEGU
Apr 16, 2026
உள்ளூர்
வாகன இலக்க தகடுகள் முறைகேடு : போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடுகள் முறையான தரநிலைகளுக்கு அமைய இல்லாவிடின், அத்தகைய வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அமையாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், 15,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த காலங்களில் புதிய வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதனை அடுத்த சில வாரங்களுக்குள் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இலக்கத் தகடுகளைச் சரியான முறையில் எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் வாகன உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி, முன் பக்க இலக்கத் தகடு வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும், பின் பக்க இலக்கத் தகடு மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும் கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும், தற்போது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தி இலக்கத் தகடுகளை மாற்றி வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான மாற்றங்களால் விபத்துக்கள் அல்லது குற்றச் செயல்கள் நடக்கும்போது வாகனங்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






