Jino
Sep 29, 2025
உள்ளூர்
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக அணி திரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் !
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் திங்கட்கிழமை பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து குறித்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்போது இன்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.
பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமானது.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல்,மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்த பேரணி ஆரம்பமானது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று வருகை தந்தது.மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடி இடத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பொலிஸாருக்கும்,போராட்டக்காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர்.அதனை தொடர்ந்து பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.குறித்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All