Search

SEGU

Nov 8, 2025

உள்ளூர்

வரவு செலவுத் திட்டம் எப்படி? சஜித் கருத்து

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக அமையவில்லை.

நாட்டு மக்கள் இன்று பல துயரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இற்கு மேலாகப் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளது. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை.

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த வரவு செலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் மற்றும் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவு செலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு, இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதைத் தவிர்த்து, அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த அரசாங்கம் இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. இது மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவு செலவுத் திட்டமாகும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கவில்லை.

முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டக் கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன.

2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp