Search

SEGU

Oct 3, 2025

உள்ளூர்

ஜனாதிபதி தலைமையில் சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS)

சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) நேற்று (02) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக, தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட, செப்டம்பர் முதல் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பழைய மாணவர் சங்கம் (AATEHM) மற்றும் அதன் நிலைபேறான சுற்றுலா பிரிவு (STU) மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை , இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை (SLTDA), இலங்கை மாநாட்டு பணியகம் (SLCB), இலங்கை சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO), இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM) என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

"இலங்கை சுற்றுலாவின் எதிர்காலத்திற்கான சுற்றுலா புத்தாக்கம் மற்றும் உறவுகள்" என்ற தலைப்பில் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் புகழ்பெற்ற சர்வதேச நிபுணர்கள் இணைந்த கலந்துரையாடலும் இந்த மாநாட்டுடன் இணைந்தாக நடைபெற்றது.

அகில இலங்கை பாடசாலை சுற்றுலா கழகங்களுக்கிடையிலான மாகாண போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

இலங்கையின் பிரதான சுற்றுலாத் தலங்களான தெற்கு,ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாணங்களையும் இணைத்து சேவை வழங்குநர்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட “Ruhunu Ring” இணையத்தளமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டதோடு "Vision2Voice" சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகத்தால் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய 10 சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் இதன் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுலா ஆய்வுகள் திட்டங்கள் மற்றும் நிலைபேறான சுற்றுலா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுரங்க டி சில்வா ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சுற்றுலாத் துறை நிபுணர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் குறிக்கோள் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவதாகும் என்று கூறினார். இளைஞர்களை சுற்றுலாத் துறைக்கு ஈர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டின் கலாசாரம், நாகரிகம் மட்டுமன்றி வேறு எந்த நாட்டிலும் காணப்படாத இலங்கை மக்களுக்கு தனித்துவமான விருந்தோம்பலை உலகிற்கு எடுத்துச் செல்ல சுற்றுலா ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை தெளிவுபடுத்தினார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை (SLTDA) மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் (SLPB) தலைவர் புத்திக ஹேவாவசம், சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp