Oct 16, 2025
உள்ளூர்
இந்தியா விஜயமானார் பிரதமர் ஹரிணி.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக, ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.
புதுடெல்லி சென்றடைந்த பிரதமரை, இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் திருமதி. மஹிஷினி கொலொன்னே மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட இந்திய அரசியல் தலைவர்களுடன் இலங்கைப் பிரதமர் மேற்கொள்ள இருக்கின்றார்.
NDTV உலக மாநாடு 2025 இல் பங்கேற்கும் பிரதமர் அதில் முக்கிய உரையை ஆற்ற உள்ளார். இந்த மாநாடானது உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க வழிவகுக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சராக, பிரதமர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி, மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) பழைய மாணவியான இலங்கைப் பிரதமர், இந்த விஜயத்தின் போது தனது பழைய கல்லூரிக்கும் விஜயம் செய்ய உள்ளார். அத்தோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக நிகழ்விலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயமானது, இலங்கை-இந்திய உறவுகளின் நீடித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மை மற்றும் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








