Oct 28, 2025
உள்ளூர்
வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்.
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை 28.10.2025 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களிடம் கூறியவை வருமாறு,

டிஜிட்டல் மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டணங்கள் மட்டுமின்றி அபராதத்தையும் (GovPay) மூலம் செலுத்துவதன் மூலம் கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது. பொலிஸாரின் சேவையையும் இது இலகுப்படுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது.
(GovPay) மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மற்றும் தென்மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது. நவீன முறைமை என்பது வெளிப்படை தன்மையானது. எனவே, பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இன்றைய நவீன உலகில், நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கி செல்ல முடியும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்திக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்." - என்றார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








