Search

Jino

Sep 29, 2025

உள்ளூர்

“மக்களுக்காக சேவையாற்றுங்கள்” - பிரதமரின் அறிவுரை.

மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன், திறமையுடன் செயற்படும் அரச சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வில், 1890 புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

- இதன்போது உரையாற்றிய பிரதமர்,

"நீங்கள் இன்று இந்த நாட்டில் இருந்து வந்த சம்பிரதாய அரச சேவையில் இணையவில்லை என்பதை நான் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். இத்தனை காலமும் இருந்து வந்த வினைத்திறனற்ற, அரசியல் பக்கச் சார்பான அரச சேவைக்குள் நீங்கள் இன்று இணையவில்லை. மாறாக மக்களுக்காகச் செயல்படும், சுயாதீனமான அரச சேவையிலேயே இணைந்துகொள்கிறீர்கள்.

2020 நவம்பரில் இதற்கான பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அரச சேவையில் திறந்த ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதால், இந்தப் போட்டிப் பரீட்சையை 4 வருடங்களின் பின்னரே நடத்த நேர்ந்தது. இதனால் அரச சேவையில் ஐயாயிரம் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இப்பரீட்சையும், 2,223 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு அமையவே நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, இன்று 1890 புதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நீங்கள் அரச சேவையில் இணைந்து கொள்கிறீர்கள்.

அத்துடன், இந்த ஆட்சேர்ப்பு, 2020ஆம் ஆண்டு இலங்கையின் மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு அமைய, எழுத்துப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் திறமை வரிசையைத் துல்லியமாகப் பின்பற்றப்பட்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு மிகுந்த வெளிப்படைத்தன்மைமிக்க விதத்திலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு, எஞ்சியிருக்கும் தகுதி பெற்ற ஏனைய விண்ணப்பதாரர்களையும் ஆட்சேர்ப்பில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

சம்பிரதாய அரச சேவைக்குப் பதிலாக திறமையான, சுதந்திரமான அரச சேவையை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அரச சேவை மூலம் மக்களுக்கு மிக விரைவாகச் சேவைகளை வழங்குவதும், மக்களுக்காக உணர்வுபூர்வமான அரச சேவையை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இன்று அரச உத்தியோகத்தர்களுக்குச் சுயாதீனமான செயற்பட வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. எமது அரசாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் அரச சேவையில் தலையிட மாட்டார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அந்தச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதாக எமக்கு அறியக் கிடைத்திருக்கின்றது. மோசடி, ஊழல், அநீதி ஆகியவை நாடு முழுவதும் மிகவும் ஆபத்தான முறையில் பரவியிருந்ததாலேயே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்தார்கள். ஆகையினால் இதற்கு மேலும் எந்தவொரு சேவையிலும் அநீதி, மோசடி, ஊழல் இடம்பெறக்கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் பற்றி எமக்கு அறியக் கிடைப்பின், அரசாங்கம் என்ற வகையில் அவற்றுக்கு எதிராக உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கே நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அவ்வாறான மோசடி, ஊழல், முறைகேடுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் நேர்மையான உத்தியோகத்தர்கள் என்ற வகையிலும், பொதுமக்கள் என்ற வகையிலும் அவற்றை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கின்றது. மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் மாத்திரமின்றி, அரச உத்தியோகத்தர்களாகிய நீங்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

மக்களுக்காக அர்ப்பணிப்புமிக்க, திறமையான அரச சேவையில் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒத்துழைக்குமாறு பிரதமர் புதிதாகப் பணியில் இணையும் உத்தியோகத்தர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதி அமைச்சர் ருவன் சேனாரத், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டார, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிஷான் மெண்டிஸ் ஆகியோரும், பெருமளவு நியமனம் பெறுவோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp