Rebecca
Sep 5, 2025
உள்ளூர்
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம் மண்டபத்தில் இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும், தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த 5 காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும் , பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது. குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், து.ரவிகரன்,ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன்,மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.மேலும் தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு,எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
எனினும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம்.அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என ஒருமித்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.குறித்த கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அங்கிருந்து வெளியேறினர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All