Rebecca
Nov 27, 2025
உள்ளூர்
காலநிலை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள்
அடுத்த 2 நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு, வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.
பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் புதிய தரவுகளின் அடிப்படையில் அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும் ஜனாதிபதி மகாவலி மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகங்களுக்கு அறிவுறுத்தினார்.
தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படை பிரதானிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








