Rebecca
Nov 25, 2025
உள்ளூர்
பதுளை - கொழும்பு வீதியின் போக்குவரத்து மட்டுப்பாடு
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தற்போது ஒரு வழிப்பாதை திறந்துவிடப்பட்டுள்ளது.
பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேவேளை மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியில் மழை பெய்யாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் வாகன போக்குவரத்துக்காக ஒரு வழிப் பாதையை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதன் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வளா கங்கையின் தலகாகொட மற்றும் பாணதுகம ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் 4 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








