Search

Rebecca

Nov 6, 2025

உள்ளூர்

தெதுறு ஓயாவில் மாயமான நால்வர் சடலமாக மீட்பு

சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (05) பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மாகொல மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 12, 16, 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் போது சம்பவத்தில் உயிர் பிழைத்த சிறுவன் தெரிவிக்கையில்,

"முதலில் மாரவில தேவாலயத்துக்குப் போகத்தான் வந்தோம். அதன் பின்னர் முன்னேஸ்வரம் சென்று பின் சாப்பிட்டுக் குளிப்பதற்காகத்தான் இங்கு வந்தோம். நாங்கள் வேறு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தோம். பிறகு, இங்கே தண்ணீர் நன்றாக இருக்கிறது என்று இங்கே வந்தோம். தண்ணீர் அதிகமாக இல்லை. ஒரு அடி பின்னால் வைத்தவுடனே குழி ஒன்றில் விழுந்தோம். நானும் விழுந்தேன். ஒரு அண்ணா என்னைக் காப்பாற்றினார். எங்கள் மாமி, அவருடைய இரண்டு மகன்களும் இல்லை. பக்கத்து வீட்டு மாமியின் இரண்டு பிள்ளைகளும் இல்லை."

இதற்கிடையில், ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது ஏற்படும் விபத்துக்களால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான இடங்களில் குளிப்பதே இந்த நிலைமைக்குக் காரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp