Search

Rebecca

Nov 19, 2025

உள்ளூர்

‘நிலம் விடுவிப்பு’ என விளம்பரப்படுத்துகிறது : இரா.சாணக்கியன்

இன்றளவிலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகள் அரசு விடுவிக்கவில்லை. அரசு வழக்கமாக சில சாலைகளைத் திறந்து வைத்து, அவற்றை ‘நிலம் விடுவிப்பு’ என விளம்பரப்படுத்துகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

பாதீட்டில் பாதுகாப்புத் துறைக்கான அதிகப்படியான நிதி ஒதுக்கீடு காணப்படுகின்றது. ஆனால் “வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் காணி உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன” யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் போன்ற முக்கிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன,

முழு நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நாட்டில் உள்ள முதியோர் ஆகியோரின் தேவைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இன்றளவிலும் பிள்ளைகள் தற்காலிக கூடங்களில் கல்வி கற்கின்றனர்.

பிரதமர் ஹரிணி எதிர்க்கட்சியில் இருந்த காலத்திலும் கல்விக்கு குறைந்தது 6 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தற்போது இன்று அவரே ஆட்சியில் இருந்தாலும் கல்வி துறைக்கான நிதி பாதுகாப்புத் துறையை ஒப்பிடும் வகையில் இல்லை. இது ஆட்சியின் முன்னுரிமைகளில் ஒரு முரண்பாடாகும்.

வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுகின்றது.

வட மாகாணத்தில் நிலம் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறுவது தவறானது அரசு வழக்கமாக சில சாலைகளைத் திறந்து வைத்து, அவற்றை ‘நிலம் விடுவிப்பு’ என விளம்பரப்படுத்துகிறது. ஆனால் சாலையின் இருபுற நிலங்களும் இன்னும் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வடபகுதியில் உள்ள வயவிளான் பாடசாலை மாணவர்கள் இன்று வரை ஒரு விளையாட்டு மைதானத்தில் உள்ள தற்காலிக கூடாரத்தில் கல்வி கற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் மீண்டும் எழுத்து:

2005ஆம் ஆண்டு திருகோணமலையில் அனுமதியின்றி புத்தர்சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் மக்களால் மற்றும் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அதே கேள்வி இன்னும் தீர்க்கப்படவில்லை.

வட-கிழக்கில் உள்ள தமிழர்களின் நில உரிமைகள் தொடர்ந்து எதிர்மறை நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. எமது நிலத்தைப் பாதுகாக்க முடியாத நிலை இன்றளவிலும் தொடர்கிறது.

பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைத் திருதியமைத்து, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற மக்கள் நலத்துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp