Search

Rebecca

Nov 20, 2025

உள்ளூர்

விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் - யாழில் சம்பவம்!

யாழ்.நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று உயர்தரப் பரீட்சை மையமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற் பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது தவறு இம்முறையே நேர்ந்திருப்துடன், தொடர்புடைய மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மிகவும் மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று பரீட்சை மத்திய நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது. அங்கு சமீபத்தில் உயிரியல் பாடத்தின் முதலாம் பகுதியான பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி விடைகளை எழுதி முறைப்படி கையளித்துள்ளனர். இந்த விடைத்தாள்கள் அன்றையதினமே உயரிய பாதுகாப்புடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக் குறைவால் அவை திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படவில்லை.

மூன்று நாள்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதங்களுடன் அவை கட்டப்பட்டு இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விடைத் தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் தோன்றியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் அதுவும் உயிரியல் போன்ற பாடங்களில் ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள்கூட மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வகையில் அமைகின்றன. இவ்வாறிருக்கையில், ஒரு பகுதி விடைத்தாள்கள் திருத்தல் பணிகளுக்கு அனுப்பப்படாதமை மாணவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், அவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு எதிராகத் திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp