Rebecca
Nov 21, 2025
பல்சுவை
இளையராஜாவின் பெயர், படத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை, வணிக நோக்கத்துடன் பயன்படுத்த சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குறைஞர் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏ ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாக குற்றம் சாட்டினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், தனது புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இது தனது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும், சில நேரங்களில் அவதூறான கருத்துகளும் பதிவிடப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







