Rebecca
Nov 5, 2025
உள்ளூர்
அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்
அம்பலாங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்துக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த வருஷவிதான மிரந்த என்ற 54 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பலாங்கொடை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சார்பில் இவர் பட்டியலில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தா' என்ற நபரின் மைத்துனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைக்குக் காரணம், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முந்தைய நாள் மீட்டியாகொடையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மீட்டியாகொடை 'மஹதுர நளின்' மற்றும் மற்றொருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கான பழிவாங்கலாக இருக்கலாம் எனத் தற்போது தகவல்கள் வெளியாகி வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்டியாகொடை மஹதுர நளின் கொலையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், நேற்று கொல்லப்பட்ட மிரந்த எந்தவொரு மனிதக் கொலைக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரந்தெனிய சுத்தாவின் தரப்பை பழிவாங்கும் நோக்கில், மஹதுர நளினின் தரப்பினரால் மிரந்தவின் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சிசிரிவி காட்சிகளின் ஊடாக ஒரு நபரைக் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வருஷவிதான மிரந்த என்பவர் அம்பலங்கொடை மோதர மஹா தேவாலயக் குழுவின் தலைவர், அம்பலங்கொடை மீன்பிடி துறைமுக முகாமைத்துவக் குழுவின் உப தலைவர், அம்பலங்கொடை கிராமிய மீனவர் அமைப்பின் செயலாளர், அம்பலங்கொடை ஹிரேவத்த கூட்டுறவு மீனவர் சங்கத்தின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பில் இன்று பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளது.
அதில், கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரை சிவப்பு நிற கார் ஒன்று துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது. பின்னர் அந்தக் கார், மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை விரட்டிச் சென்று சுட்டுக் கொல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி மீட்டியாகொடை, மானம்பிய, தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பு இயக்கியிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொடையில் கொல்லப்பட்டவரின் தந்தையான மஹதும நளின் என்பவரின் மகனான இசுரு என்பவர், கரந்தெனிய சுத்தாவின் மைத்துனனின் வெளிநாட்டில் உள்ள மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியமை இதற்கு காரணமாகியுள்ளது.
அப்போது அவர், "உங்கள் அப்பாவை கொன்றது நான் தான். அவர் என் அப்பாவைக் கொன்றதால்" என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இசுரு என்பவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோனையின் பேரில், எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








