Sep 19, 2025
உள்ளூர்
இலங்கை தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயம் (2025-2029) அறிமுகம்.
ஜனாதிபதியின் தலைமையில் தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை (2025 - 2029) அறிமுகம் செய்தல் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தை (NCSOC) திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் மூலம், முன்னேறிய நாடுகளுக்கு இணையாக நாமும் முன்னேற முடியும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைத்து துறைகளிலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இலங்கையை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரு திட்டமாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை (2025 - 2029) அறிமுகம் செய்தல் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தை (NCSOC) திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (19) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதார மாற்றத் திட்டத்தில் ஒரு தனித்துவமான சந்தர்ப்பமாக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் அனைத்துப் பிரஜைகளையும் உள்ளடக்கிய வகையில் டிஜிட்டல் சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (CERT), டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து உலக வங்கியின் தொழில்நுட்ப ஆதரவுடன், இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை (2025-2029) அறிமுகப்படுத்தியுள்ளது.
சைபர் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட மற்றும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், சைபர் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு தொழிற் படையை உருவாக்குதல், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே சைபர் பாதுகாப்பு குறித்த அறிவு மற்றும் மனப்பாங்கை வளர்த்தல், அரச நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துதல், இலங்கை செர்ட் நிறுவனத்தின் திறனை மேம்படுத்துதல்,

முக்கியமான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை பேணும் நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான சைபர்வெளியை உருவாக்குவதற்காக பல்வேறு தரப்பினருடனான ஒத்துழைப்பை மேம்படுத்தல், இந்த மூலோபாயம் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை பேணும் 37 நிறுவனங்களை 24 மணிநேரமும் கண்காணித்து, அவற்றுக்கு விடுப்படும் சைபர் அச்சுறுத்தல்களை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சைபர் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் மற்றும் ஊடுருவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொருத்தமான தரப்பினர்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம் அரசாங்க சைபர் கட்டமைப்புகள் மற்றும் பொது டிஜிட்டல் சேவைகளைப் பாதுகாப்பது இதன் பொறுப்பாகும்.

இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் தாங்கும் திறனை மேம்படுத்தல், சைபர் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தல் மற்றும் விரைவாக பதிலளித்தல், பாதுகாப்பான டிஜிட்டல் செயல்பாடுகளைப் பேண அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு ஆதரவு வழங்கல் மற்றும் தெளிவூட்டல் இந்த மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்படும். செயல்பாட்டுத் தொடர்ச்சி, விரைவான பதிலளிப்புகள், குறைந்த செலவுகள், இணக்கத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவை இதன் பிரதிபலன்கள் ஆகும்.
இந்த தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயம் (2025-2029) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவினால் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தால் கிடைக்கும் வெற்றிகளை விரைவாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நாடுகள், மிக விரைவாக முன்னேற்றத்தை நோக்கி நகரும் எனவும் குறிப்பிட்டார். இந்த தேசிய சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பு நமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும், பிரஜைகளின் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








