Search

Oct 17, 2025

உள்ளூர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் - பிரதமர் ஹரிணி சந்திப்பு. #Video

கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு மேற்கொண்டிருக்கும் அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஒக்டோபர் 16, 2025 ஆம் திகதி புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களைச் சந்தித்தார்.

இதன் போது நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், பொருளாதார ஒத்துழைப்பு, தொடர்பாடல், டிஜிட்டல் பரிவர்த்தனை, கல்வி மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் உறவுகள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவினை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

அத்தோடு கடல்சார் இணைப்பு, மின்சாரம், வலுசக்தி, வர்த்தகம், மற்றும் கல்வித் துறைச் செயல்திட்டங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளையும், நிதி ரீதியாகப் பெற்றுத்தரும் ஒத்துழைப்பினையும் பிரதமர் பாராட்டினார்.

சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா பெற்றுக் கொடுத்த ஆதரவுகளை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கைக்கு நெருங்கிய நேச நாடு என்ற வகையிலும், பிராந்தியத்தின் நீண்டகாலப் பங்காளர் என்ற வகையிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்தாலோசித்தனர். உற்பத்தி, உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் அறிவுசார் சேவைகள் ஆகிய துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp