Search

Oct 30, 2025

உள்ளூர்

தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவை செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம் ! #Video

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்று (30) செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மறைமாவட்ட ஆயர்கள், அருட்சாகோதரர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அணையா தீப தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர்கள் பின்னர் ஊர்வலமாகச் சென்று சிந்துபாத்தி மயானம் சுற்றுவட்டத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம்,

“செம்மணி மனித புதைகுழி குறித்து உண்மையை வெளிக்கொணர அரசு, சிவில் சமூகம் மற்றும் மத சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது நாட்டின் நல்லிணக்கத்திற்கான அடிப்படையாகும்,” என்றார்.

மேலும், “செம்மணி மனித புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். உண்மையை மறைப்பது சமூகங்களுக்கிடையேயான அவநம்பிக்கையை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. வளங்களின் பற்றாக்குறையால் உண்மையை சமரசம் செய்ய முடியாது,”என வலியுறுத்தினார்.

அதேபோல, 2017இல் நிறுவப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் இதுவரை 21,000க்கும் மேற்பட்ட முறையீடுகளைப் பெற்றிருப்பது, காணாமல் போனவர்களின் துயரம் அனைத்து சமூகங்களையும் பாதித்திருப்பதை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

செம்மணி மனித புதைகுழி தனித்துவமான வேதனையை வெளிப்படுத்துகிறது.

மற்றைய மனித புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், இங்கு பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவை உயிர்கள் அழிந்ததையும், மேலும் எமது நாட்டைச் சிதைத்த இன அரசியல் பரிமாணங்களையும் சாட்சியப்படுத்துகின்றன. இவ் அகழ்வுகள் மீதான மௌனம், சமூகங்களுக்கு இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதோடு, போரின் காயங்களை நீடிக்கச் செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

செம்மணி மனித புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல் போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல்,

நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த வகையில் இந்நாட்டின் மக்களாகவும் பாதிக்கப்பட்டவர்களோடும் அவர்களின் என்பதை குடும்பத்தினரோடும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்துகிறோம் வலியுறுத்துகிறோம்.

நீதி என்பது மனித உரிமை மட்டுமல்ல அது வேதாகமக் கட்டளையாகும். இதையே இறைவாக்கினர் மீக்கா நமக்கு நினைவூட்டுகிறார், "நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"

எனவே, எத்தகைய வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அரசு, சிவில் சமூகம் மற்றும் மத சமூகங்கள் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் அழைக்கிறோம்.

அத்துடன் நேர்மையும் தைரியமும் கொண்டு நீதி நாடப்பட்டால் மட்டுமே குணமடையும் நிலையும் நல்லிணக்கமும் சமூகத்தில் வேரூன்றும் என்றும் வலியுதுத்தியிருந்தமை குதிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள அனைத்து, பல்வேறு கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp