Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

எல்ல விபத்து தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை

எல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் தாம் மிகவும் வருத்தமடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எல்ல விபத்து தொடர்பில் வருத்தத்தை தெரிவித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

அதே நேரத்தில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு விரைந்து செயல்பட்ட காவல்துறை உட்பட பாதுகாப்புப் படையினருக்கும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், எல்ல நகர மக்களுக்கும் எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துயர் நிகழும் சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் கொண்டுள்ள உன்னத நற்பண்பை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கக் கிடைத்த சந்தர்ப்பமாக நான் இதைப் பார்க்கிறேன்.

இந்த துயர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களினது உறவினர்களுடன் மற்றும் தங்கல்ல மாநகர சபையின் சகலருடனும் இந்த துயரமான நேரத்தில், துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இதுபோன்ற பல துரதிர்ஷ்டவசமான வாகன விபத்துகள் தொடர்பிலான சம்பவங்களை, கடந்து போன காலங்களில் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்களைக் குறைத்துக் கொள்வதற்கு எடுக்க முடியுமான சாத்தியமான சகல நடவடிக்கைகளையும், கொள்கை ரீதியிலான தீர்மானங்களையும் எடுக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாமனைவரும் தயாராக இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். காயமடைந்த சகலரும் விரைவாகக் குணமடையவும் பிரார்த்திக்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp