Jino
Oct 12, 2025
உள்ளூர்
"கருணைமிக்க சமூகமே எமது இலக்கு" – பிரதமர் ஹரிணி. #Video
"அனைவருக்கும் அன்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கப்பெறுகின்ற கருணைமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும்" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தென் மாகாண கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, மாகம் சஹூர்தயோ, காலு சஹூர்தயோ, மற்றும் துருது சஹூர்தயோ ஆகிய கலைச் சங்கங்களின் ஒன்றியத்தினால் தென் மாகாணத்தை உள்ளடக்கி நடத்தப்பட்ட 'தக்ஷிண புனருதய' (தெற்கின் மறுமலர்ச்சி) கலை விழாவை முன்னிட்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பூங்காவில் நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்டக் கலை விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஒக்டோபர் 10, 11 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தக் கலை விழாவில், திரைப்படம், நாடகம், காட்சிக்கூடங்கள், பல்வகை கலை, கலாசார அம்சங்களுடன் பெருமளவு கலைஞர்கள் பங்கேற்றனர்.
- இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
கடந்த ஒரு மாத காலமாகத் 'தக்ஷிண புனருதய' கலை விழாவை முன்னிட்டு தென் மாகாணத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டியதோடு, நாட்டில் உயரிய கலாசார மனிதர்களையும், உயரிய கலாசார சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு இத்தகைய அர்த்த புஷ்டியான நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.
- மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"அபிவிருத்தி, முன்னேற்றம் என்பது வெறுமனே வீதிகள், துறைமுகங்கள், கட்டிடங்களை உருவாக்குவது மாத்திரமல்ல. நமக்கு பொருளாதார அபிவிருத்தி தேவை. அதேபோன்று நல்ல பொருளாதார வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. ஆயினும், இவை அனைத்தையும் நாம் உருவாக்குவது எமது வாழ்க்கையை மேலும் அர்த்தம் உடையதாக மாற்றுவதற்கே ஆகும். எமது வாழ்க்கையை மகிழ்விக்கவும், எமது சமூகத்தை மேலும் முன்னேற்றம் அடையச் செய்வதற்குமே நாம் இவற்றை மேற்கொள்கின்றோம். நம்முள் கருணையை வளர்த்து, பாதுகாப்பும், பாசமும் நிறைந்த குடும்பங்கள், அன்பையும் அரவணைப்பையும் பெரும் குழந்தைகள் வாழும் சமூகத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்காகும். இவை அனைத்தையும் அதற்காகவே நாம் மேற்கொள்கிறோம்."
"நமது சமூகத்தில் அனைவரும் பாதுகாப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும், அனைவருக்கும் அன்பும் பாசமும் கிடைக்கப்பெறுகின்ற, எவருமே தனிமைப்படுத்தப்படவில்லை என உணரக்கூடிய, ஒரு முன்னேற்றம் அடைந்த சமூகத்தையே நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்," எனத் தெரிவித்த பிரதமர்,
அத்தோடு, 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தவிருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், அழகியல் கல்வி வகுப்பறைக்கும், புத்தகங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பாடமாக அமையாது, பிள்ளைகளின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக அதனை மாற்றுவதற்கு உறுதியளிப்பதாகவும், அழகியலை உணரவும், பாராட்டவும், அனுபவிக்கவும் அறிந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த பிரதமர், ஹம்பாந்தோட்டை மாவட்டக் கலைஞர்களைப் பாராட்டி பரிசுகளையும் வழங்கி வைத்தார்.
மேலும், இந் நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர்கள், கத்தோலிக்க குருமார்கள்,மௌலவிமார்கள் உட்படச் சர்வமதத் தலைவர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதுல வெளந்தகொட, வைத்தியர் சாலிய சந்தருவன், திலங்க யூ. கமகே, ஹம்பாந்தோட்டை இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ஹர்விந்தர் சிங், தென் மாகாணப் பிரதம செயலாளர் சட்டத்தரணி சுனில் அலஹகோன், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பிமல் இந்திரஜித், காலி மாவட்டச் செயலாளர் W.A தர்மசிறி ஆகியோருடன், அரச அதிகாரிகள், கலைஞர்கள், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All