Search

Rebecca

Feb 3, 2026

உள்ளூர்

மிக முக்கியமான திருப்பு முனையான போராட்டமாக கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் அமைந்துள்ளது

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பு முனையான போராட்டமாக அமைந்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையான போராட்டமாக இது அமைகிறது. ஏனென்றால் பல தசாப்தங்களுக்கு முன்னராகவே தயாரிக்கப்பட்ட இந்த இனப்பரம்பலை மாற்றுகின்ற இந்தத் திட்டம், இப்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரம் கடந்த திங்கட்கிழமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு முன்னர், நீண்ட காலமாக வடக்கிலும் கிழக்கிலும் இனப்பரம்பலை மாற்றுகிற திட்டம், அது ஒவ்வொரு திட்டங்களின் மூலமாக அமல்படுத்தப்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியும். கல்லோயா திட்டத்திலே இருந்து விசேடமாக கிழக்கின் இனப்பரம்பல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியாகவே நகர்ந்து வந்து முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா வடக்கு போன்ற பிரதேசங்களிலும் இனப்பரம்பலை மாற்றுகிற திட்டம் அமுலில் இருக்கிறது.

எங்களுக்கு ஏற்கனவே தெரியும் மணலாறு வெலியோயாவாக மாறிவிட்டது. இப்படியாகப் பலப்பல இடங்கள் முழுக்க மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கிபுல்ஒயா திட்டம் என்பது இந்த பாரியதொரு வேலைத்திட்டத்தினுடைய ஒரு பகுதி. இது கைவிடப்பட்ட திட்டமாக இருந்தாலும்கூட, இப்பொழுது மீண்டும் அதற்கு உயிர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த வருசத்துக்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. போதிய அளவு பணத்தை இதற்காக அவர்கள் செலவு செய்ய இருக்கிறார்கள்.

தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள்ளே அழுத்தி, அதில் இருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு இந்த நீர்ப்பாசனத் தண்ணீரைக் கொடுப்பதற்கான திட்டம். அதிலும் விசேடமாக இந்தத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, புதிய குடியிருப்பாளர்களையும் கொண்டு வந்து அங்கே அமர்த்துவார்கள் என்று. இப்பொழுது இருக்கிற அந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களைக் குடியேற்ற முடியாது. ஏனென்றால் அங்கே ஏற்கனவே குடியேற்றப்பட்டவர்கள் நூறு வீதமாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். எப்படியெப்படியெல்லாம் கொண்டு வந்து குடியேற்றினார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

தமிழ் மக்களை இந்த வேளையிலே கொண்டு போய் அங்கே குடியேற்றுவது என்பது முற்று முழுதும் அசாத்தியமான ஒரு விடயம். ஆகையினாலே இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவது என்பது நீண்டகாலமாக, பல்வேறு அரசாங்கங்கள் மாறி மாறி வந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நீட்சியாகத்தான் இது காணப்படுகிறது. இந்த அரசாங்கம் மிகத் தெளிவாக ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தது. அதாவது இனப்பரம்பலை மாற்றுகிற எந்த அபிவிருத்தித் திட்டத்தையும் நாங்கள் அமுல்படுத்த மாட்டோம் என்பதை எழுத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிற இந்த அரசாங்கம் தான், இப்பொழுது அதற்கு உத்தியோகபூர்வ அனுமதியைக் கொடுத்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.

ஆனபடியினால் தான் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. ஒன்றாகச் சேர்ந்து தமிழ் மக்கள் அனைவரும், எந்தவித கட்சி பேதமும் இல்லாமல், கட்சிகளைச் சேராதவர்களும், அரசியலிலே இல்லாதவர்களும் அனைவருமாகச் சேர்ந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எங்களுடைய பூர்வீகத்தைப் பாதுகாக்கிற இந்த நிகழ்ச்சியிலே இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். இந்தச் செய்தியைத்தான் நாங்கள் இப்பொழுது அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All