Search

admin

Jan 8, 2026

உள்ளூர்

நாளை மாலை கரையை கடக்கிறது தாழமுக்கம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, 2026 ஜனவரி 9 ஆம் திகதி (நாளை) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகியவற்றுக்கு இடையில் இலங்கைக் கரையை ஊடறுத்துச் செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250 கி.மீ தொலைவில் இந்த தொகுதி நிலை கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர், இன்று (08) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

காற்று வடகிழக்குத் திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு (35-45) கி.மீ அளவில் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (60-70) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் (2.5 – 3.5) மீற்றர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல). 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All