Search

SEGU

Apr 14, 2026

உள்ளூர்

பிரதமரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து

மலர்ந்துள்ள புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் ஹிரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

அவர் தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறந்திருக்கின்றது. 

புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பரஸ்பர உறவுகளின் புதிய மறுமலர்ச்சியாகும். 

குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, சுப நேரத்தில் சுப காரியங்களை ஆரம்பித்து இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக இது அமைய வேண்டும் என முதலில் பிரார்த்திக்கின்றேன். 

ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். 

பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு இக்காலப்பகுதி எமக்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகின்றது. 

மனப் பேதங்களையும் கசப்புணர்வுகளையும் களைந்து, சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதே புத்தாண்டின் உண்மையான ஆசீர்வாதமாகும். 

குறிப்பாக, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் ஒரு தேசமாக நாம் பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதாரச் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட விதம் முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகும். அந்தக் கூட்டுச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். 

இந்தச் சுப வேளையில், வெளிநாடுகளில் தமது குடும்பத்தினதும் தேசத்தினதும் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நமது சகோதர சகோதரிகள் அனைவரையும் நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன். 

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். 

எதிர்கொள்ள நேரிடும் எல்லாவித தடைகளையும் வென்று, இன்னும் சிறப்பானதும் சுபீட்சமானதுமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் புதிய சிந்தனைகளுடன் திடசங்கற்பம் பூணுவோம். 

ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக, உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் உதயமாகும் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் அயராது உழைப்போம். 

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All