
Rebecca
Feb 18, 2026
உள்ளூர்
பலத்த காற்று மற்றும் மழை!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடனான வானிலை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






