Search

Rebecca

Feb 5, 2026

உள்ளூர்

பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்!

புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

"இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்திலாவது அதற்காக அவர் குரல் கொடுப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் சமூக ஊடகங்கள் அல்லது வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

விக்ரமாராச்சி மருத்துவ பீடம் எவ்வித விதிமுறைகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் இன்று அந்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது ஒரு அரசியல் தீர்மானம் அல்ல.

விக்ரமாராச்சி மருத்துவ பீடத்தின் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம்.

இவ்வருடம் பாடசாலை அமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எக்காரணம் கொண்டும் இதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கத் தேவையில்லை. அவ்வாறு வசூலிக்கப்பட்டால் அதை உடனடியாக நிறுத்துங்கள். பாடசாலைகளில் பணம் வசூலிக்க வேண்டாம் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1-5 தரங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் தனிப்பாடமாகக் கற்பிக்கப்படாது. எனினும், தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து பயணிப்பதற்காக, ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டே நாம் தீர்மானங்களை எடுப்போம். பாடத்திட்டங்கள் குறித்து அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது; அவை அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களாலேயே தீர்மானிக்கப்படும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் அத்தியாவசிய வெற்றிடங்களுக்காகக் கல்விசார் ஊழியர்களைப் சேவையில் இணைத்துக்கொள்ள அந்தந்த நிறுவனங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதேபோல் ஆசிரியர் சேவை நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதன் தரத்தை மேம்படுத்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. ஆசிரியர் சேவையின் பதவி உயர்வுக்கான மதிப்பீட்டுச் செயல்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சேவையாப்பின்படி நியமனங்கள் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தரமான கல்விக்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்:

"பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் 'சுரக்ஷா' காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, 6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 'அஸ்வெசும' நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும்இ அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும்இ க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All