Rebecca
Dec 1, 2025
உள்ளூர்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பங்களிக்கும் நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைவரின் பங்களிப்புடன் கூடிய நிதியமொன்றை நிறுவவும், நிதியத்தை முகாமைத்துவம் செய்ய அமைச்சரவை அங்கீகாரத்துடன் கூடிய அரச மற்றும் தனியார் துறைகளைக் கொண்ட கூட்டு முகாமைத்துவக் குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுலகத்தில் நேற்று இரவு தனியார் துறை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்காக பல வழிகளில் நிதி திரட்ட முடியும் என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், சர்வதேச அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்களிலிருந்தும் அதற்கான நிதியை திரட்ட முடியும் என்றும் இந்தப் பணிகள் நியமிக்கப்படும் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக, வீடுகள், வயல்கள், பயிர்நிலங்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அரச கட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் சில இடங்களில் மின் கம்பங்கள் கூட சரிந்து விழுந்துள்ளதாகவும், மண்சரிவுகளால் சேதமாகிய பாதைக் கட்டமைப்பை பாரிய அளவில் புனர்நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அனர்த்தத்தினால் ஒவ்வொரு துறைக்கும் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மீள் கட்டமைப்புக்குத் தேவையான நிதிகள் தொடர்பான ஆவணத்தைத் தயாரிப்பது குறித்து உலக வங்கியுடன் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதுடன், Global Rapid post-disaster Damage Estimation (GRADE) தயாரிக்கும் பொறுப்பு ஏற்கனவே உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, Global Rapid post-disaster Damage Estimation, 2 வாரங்களுக்குள்பெற அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்,தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன, ஹெலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன், ஐட்கன் ஸ்பென்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








