Search

janani

Apr 2, 2026

உள்ளூர்

அரச சேவைகளை இணையவழியில் முன்னெடுப்பது குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்!

மத்திய கிழக்கு யுத்த நிலைமையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்து, அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்த அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழியில் நடைபெற்றது.

எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பாக ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் இணையவழியில் பணியாற்றுவது குறித்த வழிகாட்டல்களை ஏப்ரல் 20, 2026 இற்கு முன்னதாக சுற்றறிக்கை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழியில் பணியாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

மார்ச் 31 ஆம் திகதியளவில் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுக்கள் டீசல் நுகர்வில் 42 வீத சேமிப்பை எட்டியுள்ளன. மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

நீர் விரயமாவதைத் தடுக்கவும், மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சை உள்ளிட்ட திட்டமிடப்பட்ட பரீட்சைகள் உரிய முறையில் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி அமைச்சுக்கள் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து, ஏனைய பணிகளை இணையவழியில் முன்னெடுக்கின்றன.

தினசரி எரிசக்தி நுகர்வு, கையிருப்பிலுள்ள எரிபொருள் அளவு மற்றும் அரச ஊழியர்களின் வருகை ஆகியவற்றை ஒரு ''Dashboard'' மூலம் கண்காணித்து உடனுக்குடன் தீர்மானங்களை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் குழுவின் அடுத்த கூட்டம் 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All