
Rebecca
Feb 27, 2026
உள்ளூர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள், மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதி களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று மதியம் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிஜாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கலந்து கொண்டதோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உழவு இயந்திரங்கள் பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் கடல் பகுதி ஏனைய இடங்களை விட மாறுபட்டது என்றும், அங்கு கடலடி தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிலை தொடர அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பட்டி வலை மற்றும் சுருக்குவலை தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன. நாரா (NARA) நிறுவனத்தின் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த தீர்வை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மீனவர்களுக்கான பாடு (மீன்பிடி எல்லை) மற்றும் மீன்பிடி துறைகள் வழங்குவது குறித்தும், கடலரிப்பு தடுப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன.இந்திய மற்றும் இலங்கை மீனவர் களுக்கிடையிலான நீண்டகால பிரச்சனை குறித்து இக்கூட்டத்தில் கருத்து பரிமாறப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவைப் பயன்படுத்தி, இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய மீனவர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் ஒரு சுமுகமான முடிவை எட்ட அரசாங்கம் தீவிரமாக முயன்று வருகிறது.மன்னார் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இடம்பெற்ற குறித்த கூட்டம் கருத்துக்களை கேட்பதற்கான ஒரு கூட்டமாக அமைந்திருந்தது.
எனினும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய வகையில் குறித்த கூட்டம் அமையவில்லை என தெரிவித்தார்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






