Search

sath

Dec 29, 2025

உள்ளூர்

வரலாற்று உச்சத்தை எட்டிய சுங்க வருமானம்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுக் கொண்டு புதிய சாதனையை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் எனவும், நவம்பர் மாதம் அடையும்போது அந்த இலக்கை மீறிய அளவிலான வருமானத்தைச் சேகரிக்க முடிந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அந்த வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாயிலிருந்து 2,231 பில்லியன் ரூபாயாக மீளத் திருத்தம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், திருத்தம் செய்யப்பட்ட அந்த வருமான இலக்கையும் தற்போது சுங்கத் திணைக்களம் கடந்துவிட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.

சுங்கத் திணைக்களத்தின் உள்ளக கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிர்வாக மற்றும் செயற்பாட்டு மாற்றங்களின் விளைவாகவே இந்த உயர்ந்த வருமானத்தைப் பெற முடிந்ததாக சந்தன புஞ்சிஹேவா விளக்கினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

"இந்த ஆண்டிற்கான வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது, கடந்த ஆண்டின் வருமான இலக்கான 1,531 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2,115 பில்லியன் ரூபாயாக கணிசமான உயர்வு மேற்கொள்ளப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்ற அரசின் தீர்மானத்தையும் அடிப்படையாகக் கொண்டு அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வருமான இலக்கை மீறுவதற்கு வாகன இறக்குமதி ஒரு முக்கிய காரணியாக அமைந்ததுடன், சுங்கத் திணைக்களத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளும் இதற்கு பெரும் பங்களிப்பை வழங்கின" என அவர் தெரிவித்துள்ளார்

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All