Search

Rebecca

Dec 3, 2025

உள்ளூர்

சாணக்கியன் தலைமையில் கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்!

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும், முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்கக் கூடாது. உண்மை வெளிவந்தால் தான் நிவாரணப்பணிகளும் சரியான முறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பவங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம். சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது.

அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.

அங்கிருந்த ஒருவர் தனது முழுக் குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, 3 நாட்களாக எப்படியாவது தமது குடும்பத்தினரின் உடல்களை மீட்க வேண்டும் என போராடி வருவதாக தெரிவித்தார்.

அங்கு சிலர் தமது பணத்தினைக கொடுத்து டீசல், இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளி வைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.

நேற்றைய தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19 பேர் தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.

நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம், நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. அங்குள்ள மக்கள் எங்களைக் கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள் என குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்நிவாரணம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று சாணக்கியன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அனர்த்தம் ஏற்பட்ட போதும் நிவாரணப் பணிகள் இவ்வாறே எம்மால் எமது மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தை விட மலையகத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களிலே குடியிருக்கும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாநகர சபையானது நிவாரண சேகரிப்பில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சி பேதமின்றி அனைவரினதும் குறிப்பாக மக்களின் பேராதரவுடன் ஈடுபட்டுள்ளது.

முடியுமான மக்கள் தம்மால் முடிந்த உதவியினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் என்றும் களத்தில் நிற்கும் செயல் வீரர்கள். பிழையானதை பிழை என்றும் சரியானதை சரி என்றும் கூறுபவர்கள்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp