
Rebecca
Feb 12, 2026
உள்ளூர்
தேசிய மாற்றத்திற்கு தரமான கல்வி அவசியம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு முறையான மற்றும் தரமான கல்வியின் ஊடாக மனித வளத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட கல்விசார் அவதானிப்பு விஜயத்தின் போது உரையாற்றிய பிரதமர், "நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் பாராட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
பெலியத்த ருஹுணு விஜய தேசிய பாடசாலைக்குச் சென்ற பிரதமர், 2026ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிற்சிப் புத்தகம் மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
ஆசிரியர்களின் தொழில்முறை கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்கும் 'கல்விச் சபை' ஒன்றை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.
பாடசாலைகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் பாரபட்சங்களை நீக்கி, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என அவர் குறிப்பிட்டார்.
வீரக்கெட்டிய ராஜபக்ச ஆரம்பப் பாடசாலைக்கு விஜயம் செய்த அவர், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் கற்பித்தல் முறைகளை அவதானித்ததுடன் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
லுணம துடுகெமுணு மகா வித்தியாலயத்தில் காணப்படும் நவீன வசதிகளுடன் ஒப்பிடுகையில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அவதானம் செலுத்திய பிரதமர், மாணவர் வருகையை அதிகரிக்க முறையான திட்டத்துடன் நிர்வாகம் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது வீரக்கெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் பாடசாலையில் தங்கியிருப்பதை உறுதி செய்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பிரதமர் நாய்கல ரஜமகா விகாரைக்குச் சென்று விஹாராதிபதி வணக்கத்திற்குரிய வாகமுல்லே உதித்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நிஹால் கலாப்பத்தி, பிரதி அமைச்சர்களான ருவன் செனரத், அரவிந்த செனரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுல வெலந்தகொட உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






