
Rebecca
Feb 11, 2026
உள்ளூர்
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், நேற்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது.
இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் செல்வி சோல்பொன் மம்பெடோவா (Ms. Chobon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சமந்த பண்டா, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் திரு. ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






