Search

admin

Jul 21, 2026

உள்ளூர்

ஜனாதிபதி தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றினால் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான நிறுவனப் பராமரிப்பு மற்றும் பாதுகாவலர் உரிமை, தெருவோரச் சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம், முன்பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவை வெறும் மற்றொரு பண உதவித் திட்டமாக அன்றி, அதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கமான கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, உரிய மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், 'டித்வா' சூறாவளியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்தக் கொடுப்பனவை உரிய சிறுவர்களுக்கு விரைவாக வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்பதற்குமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் சரியான தரவுக் கட்டமைப்பொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2027 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளை அத்தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக்க பண்டார, ரோஷன் கமகே, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டீ.டீ விக்கிரமசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All