Rebecca
Dec 1, 2025
உள்ளூர்
அரசு மக்களை படுகொலை செய்துள்ளது! இரா.சாணக்கியன்
முன்னாயத்தம் இன்றி அரசு மக்களை படுகொலை செய்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்க் கட்சியுடன் இணைந்து அனைத்துக் கட்சிகளாலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தமிழரசுக்கட்சியும் இச் சபை அமர்விலே இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
இத் தீர்மானத்திற்கான முக்கிய காரணம் வடக்கு கிழக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த இயற்கை அனர்த்தத்தின் ஊடாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் 30.11.2025 மாலை 6.00 மணிக்கு பின்னர் அரசாங்கத்தினால் அறிக்கைப்படுத்தப்படவில்லை.
இவ் நிலையில் நாங்கள் அனைவரும் ஓர் அணியாக நின்று இன்றைய நாளில் எம் மக்களது குறைபாடுகள், நிவாரணப் பணிகளை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம், எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு எம் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண வந்துள்ளோம்.
எதிர்க் கட்சியாக இருக்கக்கூடிய கட்சி எமது தமிழரசுக்கட்சி. வடக்கு கிழக்கிலே உள்ளூராட்சி மன்றங்கள் எமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கின்ற செயற்பாடுகளில் உள்ளூராட்சி மன்றங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
எங்களது உதவியை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகின்றீர்கள்? நாங்கள் பல சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கட்சி.
எமது வடக்கு கிழக்கிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது? என்பது தொடர்பாக இன்றைய அமர்வை ஒரு சில மணித்தியாலங்கள் நீடிக்க கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறியும் நீங்கள் அதற்கு இணங்கவில்லை. மாலை 6.00 மணி வரை பாராளுமன்ற அமர்வு நீட்டிக்கப்பட்டிருந்தால் எமது பகுதிகளுடைய பிரச்சினைகளை நாம் கூறியிருப்போம்.
மலையகத்திலே எம் தமிழ் பேசும் மக்கள் அநேகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் தயார் நிலையில் இல்லாமல் மக்களை படுகொலை செய்துள்ளது.
எதிர்க் கட்சிக்கு முழுவதுமாக 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால் எமது கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 5 நிமிடங்கள் மாத்திரமே கிடைக்கும்.
5 நிமிடத்தில் மக்களது பிரச்சனையை முன்வைக்க எம்மால் முடியாது. பொருத்தமற்ற இச் செயன்முறையின் காரணமாக மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என அரசாங்கம் பயப்படுகின்றது என கூறினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








