
admin
May 23, 2026
உள்ளூர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - கனடா உயர்ஸ்தானிகர் விசேட சந்திப்பு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை - கனடா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் தொடர்பாக கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவரும் கனடா உயர்ஸ்தானிகரும் கொழும்பில் சந்தித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டினுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாகவும் இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாக காணப்படுகின்றது என்று குறிப்பிட்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார்.
இந்த இருதரப்பு சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினும் இலங்கை எதிர்கொள்ளும் பேரண்டப் பொருளாதார சவால்கள் குறித்தும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்கு பின்னர் நாட்டை பாதித்த சமூக பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையில் தற்சமயத்தில் தாக்கத்திற்குள்ளான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு துரித நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்சிக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், நாடாக மீண்டும் தலை நிமிர்வதற்கும், சேதமடைந்த சொத்துக்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் உலகளாவிய ரீதியாக உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) தான் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் மீண்டும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே, கனடாவின் வலுவான காலநிலை, நிதி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காலநிலை- ஸ்மார்ட்- கமத்தொழிலை (climate-smart agriculture) வலுப்படுத்துதல், நிலைபேறான காணி பயன்பாடு மற்றும் நீரேந்து முகாமைத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் இலங்கையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய வறண்ட காலநிலையைக் கொண்ட புவியியல் பகுதி முழுவதும் (உலர் வலயம்) இருக்கும் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கனேடிய டொலர் 5 மில்லியன் வேலைத்திட்டமான “ஆக்ஸஸ் ஶ்ரீலங்கா” திட்டத்தை பாராட்டினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






